விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்: சி.வி. நம்பிக்கை

இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் வடக்கு மாகாணத்தில் பெருமளவான காணிகளை படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என படையினர் கூறியுள்ளனர்.

ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம்.

எனினும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள்.

எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் சுவாமிநாதனிடம் பேசியுள்ளோம். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்தார்.