முள்ளிவாய்க்கால் முடிவல்ல! சாள்ஸ் நிர்மலநாதன்!

சிங்கள பேரினவாதிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இறுதி நாளான மே 18 அன்று தமிழ் மக்களாகிய நாம் ஓரணியில் திரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உலக நாடுகள் மெளனமாக இருக்க சில நாடுகளின் ஆதரவுடன் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் உறவுகளை கொன்று குவித்தனர்.

எத்தனையோ எமது தமிழ் பெண்களை மானவங்கபடுத்தி படுகொலை செய்ததுடன். பச்சிளம் குழந்தை முதல் எமது உறவுகளின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தன இதே முள்ளிவாய்க்கால் மண்ணில்.

பாதுகாப்பு வலயம் என அறிவித்து அப் பகுதிகளில் உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட கொத்துகுண்டுகளை எம் மக்கள் மீது வீசி எறிந்தனர்.

எங்கே ஓடுவது என தெரியாமல் எமது உறவுகள் இதே மண்ணில் தான் உயிர்நீத்தனர்.

இன்றும் மாறாத வடுக்களாக எத்தனயோ ஆயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டு இன்றும் முள்ளிவாய்க்காலின் வடுக்களை சுமந்தவண்ணம் உள்ளனர்.

இந் நாள் தமிழர்களின் இன அழிப்பு நாள். எப்படி சிங்கள பேரினவாதிகள் ஓரணியில் திரண்டு எமது மக்களை கொத்துகொத்தாக கொன்று குவித்தனரோ அதே போன்று தமிழர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

அப்போதே உலக நாடுகளுக்கு இவ் இன அழிப்பு நாள் ஒரு செய்தியை சொல்லும். முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல என குறிப்பிட்டுள்ளார்.