தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இருப்பதும் இல்லாமல் போகும் நிலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக எமது இடங்களை தாரைவார்த்துக் கொடுக்க வேணடிய நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் நேற்று செவ்வாய்க்கிழமை வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரினால் கட்சி தலைமைக் காரியாலம் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44வது நினைவஞ்சலி நிகழ்வும் இதன்போது உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஈர்ந்த வீர மறவர்களும் இதன்போது மலரஞ்சலி செலுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

வடக்கு மாகாணத்தைப் போன்று கிழக்கு மாகாணத்தின் நிலைமை இல்லை. கிழக்கு மாகாணத்தின் நிலை பற்றி இன்னும் தீவிரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சிந்திப்பதாக இல்லை. காரணம் கட்சியில் இருந்து விலக்கி விடுவார்கள் அடுத்த முறை தேர்தலுக்கு வாய்ப்புத் தர மாட்டார்கள் என்பதால் இந்த உண்மையை சொல்லப் பயப்படுகிறார்கள்.

எமது விடுதலைப் போராட்ட காலத்திலே ஒரு அங்குலக் காணிகூட பறிபோகாத நிலையில் இன்று எங்கள் கண்முன்னே ஆயிரக்கணக்கான காணிகள் எம்மவர்க்கு பாதுகாத்த எம்மவர்களுக்கான காணிகள் பறி போகின்றன. நாளை நம் வீட்டு முற்றம் பறிபோய் விடுமோ என்ற பயத்திலே தான் கிழக்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கரடியனாற்றில் 200 ஏக்கர் காணியை நீர்பாயும் குளத்தையும் சேர்த்து அடைத்து இந்த மாகாணத்தில் மாவட்டத்தில் இருக்கின்ற சோரம் போகின்ற நிலப்பற்றும் இனப்பற்றும் இல்லாத ஒரு சில தமிழ் அதிகாரிகளைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி ஒரு சிலர் சுற்றாடல், வன இலாகா, வனஜீவராசிகள், பிரதேசசபைகள் அனைத்து அனுமதிகளையும் பெற்று அங்கே நீரை உறிஞ்சுகின்ற தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

குடிநீர் இல்லாமல் எமது மக்கள் அவதியுறும் வறட்சியான அந்தப் பகுதியிலே நிலத்தடி நீரை உறிஞ்சும் அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்படவுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட உள்ளூட்சி சபைகளில், ஏறாவூர்ப்பற்று, ஆரையம்பதி, வாழைச்சேனை ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் வந்திருக்க வேண்டிய சபைகள் ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டமிடல் ஒரு சிலரின் தூரநோக்கு இல்லாத காரணங்களால் அவை பறிபோயின. ஏறாவூர் நகரசபையில ஒரு திட்டமிட்ட முடிவு எடுக்கப்படாமையால் வாழைச்சேனைப் பிரதேசசபை அடுத்த நாளே பறிபோனது.

இந்த உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பல பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயாக எமது இடங்கள் தாரைவார்த்துக் கொடுக்க வேணடிய நிலை ஏற்படும்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது. ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி யாரை எம்மோடு சேர்க்க வேண்டும் என்ற ஒரு இணைப்பை எற்படுதிக் கொள்ள வேண்டும்.

ஒழுங்கான ஆக்கபூர்வமான, ஒருங்கமைந்த திட்டங்களை நாங்கள் வேகமாக மேற்கொள்ளாது விட்டால் வருகின்ற மாகாண சபையை நிச்சயமாக நாங்கள் இழந்து விடுவோம். அவ்வாறு இழந்து விட்டால் அடுத்த ஐந்து வருடத்திலே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படும்.

பெயர் மாற்றங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பவற்றை தங்களுடைய சமூகத்தின் இருப்புக்காக இராஜதந்திரமாக ஏனைய சமூகங்கள் மேற்கொள்கின்றன. நாங்கள எமக்குள் ஒருமித்த கருத்தின்மை, திட்டமிடல் இன்மையால் பலவற்றை இழந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றமைக்கு காலம் தாழ்த்திய முடிவுகளே காரணமாகும். வருகின்ற மகாணசபைத் தேர்தலுக்காக எமது தலைமைததுவங்கள் கூடி எவ்வித திட்டமிடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு நேரமும் எமது இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர், ஊடகப் பேச்சாளர் துளசி, பரப்புரைச் செயலாளர் பிலிப்ஸ், இராசமாணிக்கம் அறக்கட்டளையின் தவிசாளர் இரா.சாணக்கியன், மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.