போரால் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நிலை! ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வடக்கு முதல்வர்

இந்த நாட்டின் பூர்வீக தமிழ் குடிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க் கொடியானது முப்பது நீண்ட ஆண்டுகளை விழுங்கி அவர்களை ஏதிலிகளாக மாற்றியுள்ளது என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தெல்லிப்பளை – கொல்லங்கலட்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவைகலட்டி எனும் கிராமத்தில் இன்று பொது நோக்கு மண்டபத்தை திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டின் பூர்வீக தமிழ்க் குடிகள் தாம் வாழ்ந்த பகுதிகளில் தமக்குக் கிடைக்க வேண்டிய உரித்துக்களுடன், தம்மைத் தாமே நிர்வகிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பின் கீழ் வாழ விரும்பினார்கள்.

ஆனால் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க் கொடியானது முப்பது நீண்ட ஆண்டுகளை விழுங்கி அவர்களது சொத்து, சுகம், இன சனம், நிலபுலங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் ஏதிலிகளாக மாற்றியுள்ளது.

இந்த நிலையில் கூட எமது மக்களுக்கு உதவுவதற்கோ அல்லது அவர்களுக்கே உரிய உரித்துக்களை வழங்குவதற்கோ அல்லது இந்த மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என ஏற்றுக் கொள்வதற்கோ விரும்பாத நிலைதான் நீடித்து வருகின்றது.

இது இன்றைய துர்ப்பாக்கிய நிலை. எம் இந்த நிலை விரைவில் மாற வேண்டும். எமது உரிமைகள் எமக்குத் திரும்பவும் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.