வடமாகாகண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்! மாவை அறிவிப்பு

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை போட்டியிடுமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இருப்பினும் சில பல காரணங்களுக்காக அந்த தீர்மானத்தினை நடத்த முடியாது போயிருந்தது.

குறிப்பாக நான் போராட்ட பாதையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தமையால் அக்காலத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ச அதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம்.

அதன் காரணத்தால் நாம் வேறொரு தெரிவுக்குச் சென்றிருந்தோம். இருப்பினும் பகுதியளவில் முதலமைச்சர் பதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்ட போதும் அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை.

அவ்வாறான நிலையில் இம்முறை முதலமைச்சர் வேட்பாளராக எனது பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்து முன்மொழியுமாகவிருந்தால் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் குதிப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.