சுதாகரை விடுவித்து விட்டு கிளிநொச்சிக்கு வருமாறு ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கோரிக்கை

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரையாவது எதிர்வரும் 18ஆம் திகதிக்குமுன்னர் விடுதலை செய்து விட்டு கிளிநொச்சி வந்தாலேயே ஜனாதிபதியின்பயணம் சிறப்பானதாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் உரியவகையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம்(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும்கூறியவை வருமாறு:-

உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் ஒடுக்கப்பட்டதாலுமே உரிமைகள் கோரி தமிழ்இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர்இன்னமும் அரசியல் காரணங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆட்சி மாற்றத்தின் பின்னர்ஜனாதிபதியால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், ஒரேயொரு கைதி மாத்திரமேவிடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

தன்னைக் கொலைசெய்ய வந்தவரை விடுவித்து விட்டதாகஜனாதிபதி அறிவித்தார். அதேவேளை, பண வசதியுடைய அரசியல் கைதிகள் சிலர்,சட்டத்தரணிகள் மூலம் வழக்கை உடைத்து விடுதலையாகியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை சந்தித்த போது, “சித்திரைப் புதுவருடத்தில் உங்கள் அப்பா உங்களுடன்இருப்பார்” என ஜனாதிபதி கூறினார்.

புதுவருடமும் முடிந்து விட்டது. விடுவிப்புஇல்லை. ஜனாதிபதி கூறிய புதுவருடம் எதுவென்று தெரியவில்லை?

தேசிய சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்வரும் 18ஆம்திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.

கிளிநொச்சியில் வாழும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றி விட்டு அதாவது, ஆனந்தசுதாகரை 18ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைசெய்து விட்டு ஜனாதிபதி வந்தால்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தார் சிறைகளில் வாடுவதால் பல குடும்பங்கள் பல வழிகளிலும்துன்பப்படுகின்றன. அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும். அரசியல் கைதிகள்விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.