வீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வருகின்ற கல்லாறு, பேப்பாறைப்பிட்டி வீதியினை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன், இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம், பேப்பாறைப்பிட்டி வீதி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வீதியின் ஒரு பகுதி தற்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 1.8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வேலைகள் தொடர்பில் மக்களுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை மற்றும் வேலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று அந்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் புனரமைப்ப வேலையை நேரடியாக பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.