அமெரிக்காவின் திடீர் தீர்மானம்! மாற்று வழியை தேடும் கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா நேற்று அறிவித்திருந்தது.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, ஐக்கிய நாடுகளுக்கான அதன் தூதுவர் நிக்கி ஹலே அறிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“அமெரிக்காவின் வெளியேற்றம் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம்.

வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம்.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன.

அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம். இலங்கை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது.

அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தான்.

அழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது. அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.