ஜெயபுரம் வயல் காணி தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலுள் உள்ள 548 குடும்பங்கள் 1983ஆம் ஆண்டு இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட ஜூலைக் கலவரத்தின் ஊடாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவ்வாறு தஞ்சமடைந்த மலையகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜெயபுரம் கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும், ஒரு ஏக்கர் வயல் காணியும் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியோடு இப்பகுதியில் குடியேற்றப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜெயபுரம் வயல் காணிகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பில் சி. சிறீதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

1985 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒன்றரை ஏக்கர் வீதம் மேட்டுக்காணிகள் வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்துக்கு ஒரு எக்கர் வீதம் 548 ஏக்கர் வயல் காணி இம்மக்களுக்கு வழங்கப்பட்டதன் அடிப்படையில் அக்காணிகளை துப்பரவுசெய்து இம்மக்கள் பயிர்செய்து வந்தார்கள்.

நாட்டில் ஏற்பட்ட தொடர் யுத்தம் காரணமாக இக்கிராமத்தில் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தியாவுக்கு சென்றதாலும், பொருளாதார வல்லமை இன்மையாலும் இவர்களால் தொடர்ந்து பயிர்ச்செய்ய முடியவில்லை.

மீண்டும் 2008 இல் இம்மக்கள் பூரணமாக இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டில் மீளக்குடியேறிய பின்னர் தங்கள் வயல் காணிகளை துப்பரவு செய்யச் சென்றவேளை அக்காணிகளில் கண்ணிவெடி உள்ளதாக கூறப்பட்டு தடுக்கப்பட்டார்கள்.

அதன்பின்னரான காலப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பூநகரி பிரதேச செயலாளரிடம் இந்த வயல் காணிகள் ஒப்படைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு, வடக்கு அபிவிருத்தி, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு ஜெயபுரம் மக்களின் மீள்குடியேற்றம், வயல் காணி விடுவிப்பு தொடர்பில் 2017.08.24 ஆம் திகதி என்னால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பூநகரி பிரதேச செயலாளர் ஆகியோரின் மேற்பார்வையில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு, வடக்கு அபிவிருத்தி, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் MPRRR&HRA/03/F7/TFR/Kilinochchi ஆம் இலக்க 2017.11.14 ஆம் திகதியின் கடிதப் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு மில்லியன் (2Mn) ரூபா நிதியுடன் இவ்வயல் காணிகளில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு திருத்த வேலைகள் நடைபெற்ற போது இக்காணிகள் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமானது எனக்கூறி இவர்களது வாழ்வாதார செயற்றிட்டம் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதோடு இவை வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் இல்லை என்பதை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், பூநகரி பிரதேச செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

1983களிலிருந்து தொடரும் ஏதிலி வாழ்க்கையும், யுத்தமும், இடப்பெயர்வும், குடும்ப உறுப்பினர்களின் இழப்பும் இவ் ஏழை மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த கிராமத்தில் வாழும் மக்களில் 90 சதவீதம் ஆனவர்கள் இந்நிலத்தைக் கிண்டியே தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறார்கள். இம்மக்களுக்கு இலங்கையின் எப்பாகத்திலும் ஒரு அங்குல நிலம் கூட இல்லை.

விவசாயத்திற்கு ஏற்ற நீர்வளமும், நிலவளமும் ஜெயபுர மண்ணில் நிறைந்திருக்கின்ற போதும் இம்மக்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளமை மனிதாபிமான நியமங்களுக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

எனவே தாங்கள் இந்த நாட்டின் அதிபர் என்ற வகையிலும், வனவளத்துறை அமைச்சர் என்ற வகையிலும் பசியோடு வாழும் இவ் ஏழை மக்களுக்கு மிகவிரைவாக நீதியை வழங்குவீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்.

தயவுகூர்ந்து இம்மக்களின் உணர்வுகளையும், பசி, பட்டினியையும் கவனத்திலெடுத்து இவ்வயல் காணிகள் ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள இம்மக்களுக்கு கிடைப்பதற்கு ஆவன செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.