விக்னேஸ்வரன் பிரிந்தால் அழிவு உறுதி! இரா. சம்பந்தன்!

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு இன்றி பிரிந்து செயற்பட்டால் “நமது மக்களை மக்களை நாமே அழிப்பதாக” அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய இரா. சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். 2015ம் ஆண்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கான அதிகாரம் இருப்பதாக தமிழ் மக்கள் காட்டியிருந்தார்கள்.

கடந்த காலங்களில் நாங்கள் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறோம். இந்நிலையில், எங்களுக்கு முன்னால் இருக்கும் வாய்ப்பை நாங்கள் வீணடிக்க முடியாது.

ஆகையினால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக நாங்கள் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது.

எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றது. விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்தது.

எனினும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தமிழ் தலைவர்களின் ஒன்றுமையினை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.