கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் பதில்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானிக்கின்றதோ அந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டு, மக்களுடைய ஒற்றுமையை மனதில் வைத்து, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கிவிடவேண்டும்.

அதற்கு மிகப் பெரும் முன்னுதாரணமாக மாவை.சேனாதிராஜா எம்.பி. கடந்த முறை செயற்பட்டுள்ளார்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இலக்குவைத்தே இந்தக் கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டுள்ளார் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் களமிறக்கப்படாவிட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா கடந்தமுறை ஒதுங்கியதைப் போன்று அமைதியாக ஒதுங்கிடவேண்டும் என்பதை சுமந்திரன் எம்.பி. மறைமுகமாக இப்படிச் சுட்டிக்காட்டியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது,

“ஒற்றுமையாக இருப்பது என்பது வேறு விடயம். அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்பது வேறு விடயம். யாரை முதலமைச்சர் வேட்பாளராகத் தீர்மானித்தாலும் அந்த முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.

2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் எல்லாக் கட்சிகளும் இணைந்து மாவை.சோ.சேனாதிராஜாதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் எடுத்தார்கள்.

அன்றைய சூழ்நிலையைக் கருதி. அந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விரும்பினார்.

விக்னேஸ்வரனை முன்வைத்தபோது, மாவை.சேனாதிராஜா, தன்னுடைய வாழ்க்கை முழுவதும் என்ன விதமாகப் பலபல தியாகங்கள் செய்தாரோ அன்றைக்கும் அதே மாதிரியாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் தியாகம் செய்து விட்டுக் கொடுத்தார்.

அதேபோன்றுதான் எல்லோரும் செயற்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

இன்றைய சூழ்நிலையில் இந்தப் பதவிக்கு கிழக்கு மாகாணத்துக்கு இவர் முதலமைச்சர் வேட்பாளர், வடக்கு மாகாணத்துக்கு இவர் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சி தீர்மானிக்கின்றபோது அந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டு மக்களுடைய ஒற்றுமைதான் முக்கியமானது என்பதை மனதில் வைத்து, தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒரு பக்கத்தில் வைத்து முன்வரவேண்டும்.

அதற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக ஏற்கனவே மாவை.சேனாதிராஜா கடந்த முறை செயற்பட்டுள்ளார். அதைப்போன்று மற்றவர்களுக்கு உகந்த நேரங்களிலேயே செயற்படவேண்டும் என்பது எங்களது விருப்பம்” – என்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் அடுத்த முறை களமிறக்கப்படமாட்டார் என்று முன்னர் தெரிவித்த நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் உண்டா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“கட்சி முடிவாக அதை நான் அறிவிக்கவில்லை. கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையில், கட்சியின் நிலைப்பாட்டை ஓரளவு விளங்கிக் கொண்டவன் என்ற அடிப்படையில் நான் அதைச் சொல்லியிருந்தேன்.

இனிமேல், கட்சி தீர்மானம் எடுக்கின்றபோது அதனை அறிவிப்பதுதான் உகந்ததாக இருக்கும். என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்பதுதான்“ – என்றார்.

ஏன் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்று மீண்டும் கேள்வி எழுப்பியபோது,

“வடக்கு மாகாண சபையில் இதுவரையில் செய்யக் கூடியவற்றைக் கூட அவர் செய்யவில்லை. தான் சார்ந்த கட்சியுடன் ஒத்துழையாமல் தனிப் பாதை பின்பற்றியதும், கட்சி அரசியலில் தேர்தல் காலங்களில் தன்னுடைய கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற எவரும், அந்தக் கட்சியில் தொடர்ந்து இருப்பது எங்கேயும் காண முடியாத விசித்திரம்.

அந்த விசித்திரமும் வெகு விரைவில் முடிவுக்கு வரவேண்டும்“ என்றார் சுமந்திரன் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்கு மாறாக கட்சி செயற்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறுத்தார்.

“நாம் கொள்கையில் பிறழவில்லை. முதலமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டு வெற்றுக் குற்றச்சாட்டு“ என்றார் சுமந்திரன் எம்.பி.