முதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும்! வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்

“வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட விருப்பம்” என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் வீட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்பின் அடிப்படையிலும், கட்சியின் அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசு கட்சியின் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன் என்றும், 2013ம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே தான் பரிந்துரைத்ததாகவும், மாவை சேனாதிராஜா தான் எனின் கட்டாயமாக தனது ஆதரவு அவருக்கே கொடுப்பேன்” என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அதேவேளை, கட்சியின் தீர்மானம் என்ற ஒன்று இருப்பதனால், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, கட்சி யாரைத் தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவு வழங்கவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.