ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதிகள் புனரமைக்கும் நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்கு முழு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதான வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாது காணப்படுவதனால் பல்வேறுபட்ட சிரமங்களை பொது மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.

குறிப்பிட்ட சில வீதிகள் ஐரோட் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீதிகளை புனரமைப்பதாக கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக தெரிவிக்கப்படுகின்ற போதும் குறித்த வீதிகள் இன்னும் புனரமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

தங்களின் தொடர்ச்சியான முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த புனரமைப்பு பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மே மாதத்தில் இதன் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தின் முறிகண்டி பல்லவராயன் கட்டு வீதி, வலைப்பாடு பிரதான வீதி, உருத்திரபுரம்வீதி, வட்டக்கச்சி வீதி, தர்மபுரம் இராமநாதபுரம் வீதி, புலோப்பளை வீதி, உள்ளிட்ட 46 இற்கும் உள்ளிட்ட வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று வருடங்களாக மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக இந்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 38 வீதமான வீதிகள் புனரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டத்தில் 60.31 கிலோமீற்றர் வீதிகளும் இரண்டாவது கட்டத்தில் 50.80 கிலோமீற்றர் வீதிகளும் மூன்றாம் கட்டத்தில் 67.87 வீதிகளும் புனரமைப்பதற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.