ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சிறீதரன் எம்.பி!

விவசாயிகளுக்கான விவசாய காப்புறுதியை பெற்றுக் கொடுக்க வழிவகுத்து தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,

வெள்ளப்பேரிடரால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இலங்கையின் பாரிய நீர்ப்பாசன குளங்களுள் ஒன்றாக விளங்கும் இரணைமடுக்குளம், கனகராயன் ஆற்று படுக்கையை மையமாக கொண்டே அமைந்துள்ளது.

இக்குளம் நிரம்புவதால் வெளியேறும் நீர் வட்டக்கச்சி, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பெரியகுளம், நாகேந்திரபுரம் ஊடாக கண்டாவளை கிராமத்தை மேவி பாய்ந்து கடலோடு சங்கமிக்கிறது.

இதனால் பாரியளவு பாதிப்புக்களை எதிர்கொள்ளும் கிராமமாக கண்டாவளை கிராமமே காணப்படுகிறது.

40 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 2018.12.21 ஆம் திகதி பெய்தகடும் மழை காரணமாக கண்டாவளை கிராமத்தின் சகல போக்குவரத்து வழிகளும் முடக்கப்பட்டு தொடர்ந்து 4 நாட்கள் அக்கிராமம் வெள்ளத்தால் மூடப்பட்டு வெளி தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் தனி தீவாக்கப்பட்டிருந்தது.

நூற்றுக்கு நூறுவீதம் நெற்பயிர் செய்கையை அடிப்படையாக கொண்ட இக்கிராமத்தின் 5280 ஏக்கர் வயற்காணிகளில் 1283 விவசாயிகள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய நெற்பயிர்கள் பூக்கும் பருவத்திலேயே இவ்வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களுக்குள் நீர் உட்புகுந்து 90 வீதமான பயிர்கள் விளைச்சலற்ற நிலையில் காணப்படுகின்றன.

இவ்விவசாயிகளுக்கு வயற்செய்கைக்கான உரமானியம் வழங்கப்படும் போதே விவசாய காப்புறுதியும் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக இவ்வாறு விவசாய காப்புறுதி செய்யப்பட்டிருந்தும் இன்று வரை அவர்கள் எந்த விதமான இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இம் முறை ஏற்பட்ட பாரிய வெள்ள அழிவினால் கண்டாவளைக் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிப்படைந்துள்ள நிலையில் விவசாயக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் பயிரழிவுக்கான விவசாயக் காப்புறுதிகளை வழங்குவதற்கு பின்னடிப்பது மனவருத்தமளிக்கிறது.

பயிரழிவுகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து செல்லும் சில அதிகாரிகள் மாற்றான் தாய் மனப்பான்மையோடு வயலில் இறங்கி பயிர்களை பார்வையிடாது வீதியில் நின்றவாறே பார்வையிட்டு அதனடிப்படையில் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றமையும் விவசாயக் காப்புறுதிகளை பெற்றுக்கொடுப்பதில் தடங்கலை ஏற்படுத்துகிறது.

வெள்ளப்பேரிடரால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தாங்களும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குடிமகன் என்ற வகையிலும் நாட்டின் சிறந்த விவசாயி என்ற வகையிலும் கண்டாவளை, முரசுமோட்டை, பெரியகுளம், நாகேந்திரபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாய காப்புறுதியைப் பெற்றுக்கொடுக்க வழிவகுத்துத் தருமாறு தங்களை தயவுடன் கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.