தன் தோல்விக்கு காரணமான விக்கியுடனே கூட்டுச்சேர்ந்திருக்கும் அருந்தவபாலன்: நிலமையை விளக்கிய சுமந்திரன்!

2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு 06 வாக்குகள் குறைந்திருந்தால் எமக்கு ஓர் ஆசனம் கிடைத்திருக்கும். தென்மராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அருந்தவபாலன் வந்திருப்பார். அது கிடைக்காமல் போனதற்குக் காரணமானவருடன் இன்று அவர் கூட்டுச் சேர்ந்துள்ளார்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த 03 ஆம் திகதி சாவகச்சேரியில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் கிறிஸ்தவ மத பாதிரியார் வணக்கத்துக்குரிய றெக்ஸ் சௌந்தரநாயகம் 11 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பால் போடப்படவில்லை. குறிப்பாக தென்மராட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. என்று தெரிவித்தார்.

அதற்குப் பதலிறுக்குகையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

யாழ்.மாவட்டத்தில் தொகுதி வாரியாகப் 11 தொகுதிகள் உள்ளன. ஆனால், தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07. ஆகவே ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கமுடியாது. எங்களது சனத்தொகை குறைவடைந்துவிட்டது. ஏழு ஆசனங்களும் எமக்குக் கிடைத்திருந்தாலும் 11 தொகுதிகளுக்கும் நிரப்பமுடியாது.. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 05 பேர்.

நாம் ஏன் 05 பேர் இருக்கின்றோம் என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவேண்டும். விசேடமாகத் தென்மராட்சியில் இருப்பவர்களுக்குத் தெரிதல் வேண்டும். 2015 ஆம் ஆண்டும் தேர்தலில் நாங்கள் ஆறு ஆசனங்களைப் பெற்றிருப்போம். ஆறு ஆசனங்களை நாம் பெறாதமைக்கான காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு 06 வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கப்பெற்றிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு 06 வாக்குகள் குறைவாகக் கிடைத்திருந்தால் எங்களது 06 ஆவது உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருப்பார். அருந்தவபாலனும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருப்பார். ஆறு வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைத்தமையால்தான் அந்த ஆசனம் பறிபோனது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கச் சொன்னவர் யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சுட்டிக்காட்டியவர் யார்? வீட்டுக்குள்ளே இருக்காமல் வெளியே வந்து தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டோடு இருப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னவர் யார்? விக்னேஸ்வரன் ஐயா! அவர் அவ்வாறு சொன்னமையால் ஆறு வாக்குகள் போயிருக்கக்கூடும் அல்லவா! தென்மராட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைக்காமல் போனமைக்கு யார் காரணமாக இருந்தார்? இன்றைக்கு அவரும் இவரும் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்கின்றார்கள்.

ஆகவே, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். உண்மையான தகவல்களைத் தெரிந்திருக்கவேண்டும். அதைவைத்து தங்கள் தீர்மானத்தை எடுக்கவேண்டும். – என்றார்.