தயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு!

புலம்பெயர் தேச முதலீட்டாளர்கள் இனி வடக்கு கிழக்கில் நேரடியாக முதலீடுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் வடக்கு கிழக்கில் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் நிறைவேற்றுக்குழு தலைவராக பிரதமர் ரணில் இருக்கின்றார் குழு உறுப்பினர்களாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், வடமாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் என எட்டுப்பேர் அங்கம் வகிக்கின்றனர்.

செயலணியின் பணிப்பாளர்களாக நோர்வேயில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் செல்வின் ஐரேனியஸ் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், கனடாவில் இருந்து மீளத்திரும்பியிருக்கும் குகதாசன் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இச்செயலணியின் பிரதான நோக்கம் வடக்கு கிழக்கில் தொழில் நிறுவனங்களை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பல் ஆகியனவாகும். இச்செயலணிக்கென முதற்கட்டமாக இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒரு தொகுதி நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் அனுகூலமாகும். இதனூடாக வடக்கு கிழக்கு துரித வளர்ச்சி அடைவதோடு தொழில்துறையில் முன்னேறவும் வழியேற்பட்டிருக்கிறது.

இச்செயலணியின் செயற்பாடுகள் உச்சகட்ட வினைத்திறனோடு செயற்பட வேண்டுமெனில் புலம்பெயர் தேசத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தம் திட்ட முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று கனேடிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் கோரியுள்ளார்.

தாயகத்தின் அபிவிருத்திக்கு இனி புலம்பெயர் தேசத்தின் உறவுகள் தாராளமாக கரம் கொடுக்க முடியும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி எம் தாயகத்தை வளப்படுத்த முடியும்.