தீர்வு தொடர்பில் தொடர்பில் மஹிந்த இரட்டை வேடமிடுகிறார்: யோகேஸ்வரன் சீற்றம்!

அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டுமென தான் ஜனாதியாக இருந்தபோது வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்பொழுது மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் குழுவில் இணைந்து செயற்படுகிறது.

தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பபை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவர விடமாட்டேன் என தென்பகுதி மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார்.

புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதனால், இது சமஷ்டியைக் குறிக்கிறது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது என மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் தீவிர பிரசாரம் செய்கிறார்கள்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது, அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தீர்வு வழங்கப்படும் என பிரசாரம் செய்திருந்தார். அந்தவேளையில் அவர் உருவாக்கிய சர்வ கட்சிக்குழு அறிக்கையிலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அவரே தற்பொழுது மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது, அதிகாரங்கள் பரவலாக்கப்படக் கூடாது என தெரிவிக்கின்றார்“ என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.