நீதிமன்ற பக்கமே செல்லாமல் சட்டத்தரணி என்று சொல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த சுமந்திரன்!

சட்டத்தரணிகளாக இருந்துகொண்டு நீதிமன்றம் செல்லாதவர்கள் எம்மைப் பார்த்து குற்றஞ்சொல்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

சாவகச்சேரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்துக்களால் களமாடுவோம் நிகழ்வில் புத்திஜிகளால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்குக் களமாடுகின்றபோது – காணி விடுவிப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கின்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;-

சம்பூர் காணிகள் விடுவிப்பு தொடர்பில், சம்பூரில் இனிக் கிடைக்காது என்றிருந்த காணிகளை – அரசாங்கம் சுவீகரித்து முதலீட்டுச் சங்கத்துக்கு வழங்கி, முதலீட்டுச் சங்கம் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 99 வருடங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தது.

அப்படியிருந்த காணிகளைத்தான் நாங்கள் வழக்காடி வென்றோம். முழு நிலங்களையும் நாங்கள் மீட்டோம். இன்றைக்கும் அங்கே அந்த மக்கள் மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் ஒவ்வொரு தடவையும் போகு;போது ”ஐயா எங்களுடைய தோட்டத்தில் நாங்கள் பயிரிட்ட மரக்கறி” என்று எங்களுக்குத் தருவார்கள். முடிந்த கதையாகிவிட்ட நிலங்களை மீளப் பெற்றோம். நீதிமன்றத்தின் ஊடாகத்தான் பெற்றோம். ”ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க நீதிமன்றம் போனீர்களே! எங்களுடைய மக்களுக்காகப் போனீர்களா” என்று வினா எழுப்புபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது.

எத்தனை வழக்குகளை வெற்றிகரமாகச் செய்துமுடித்திருக்கின்றோம். இன்னம் எத்தனை வழக்கைச் செய்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலா பேசுகின்றார்கள்.

அவர்கள் நீதிமன்றத்துக்குப் போகவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் .அவர்களில் பலர் சட்டத்தரணிகளாக இருக்கின்றார்கள். ஒரு வழக்குக்கும் போனது கிடையாது. ஏன் நீதிமன்றத்துக்கே போகவில்லை.

அவர்கள் எங்களிடம் இவ்வாறான கேள்விகளைக் கேட்கலாம். அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை அவர்கள் கேட்டால்தானே நாங்கள் செய்தவற்றைச் சொல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார்…