பாரத தேசத்தின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

கிளிநொச்சியில், பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளையின் அலுவலகமான அறிவகத்தில் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸினின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் இன்றைய தினம் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

பாரத தேசத்தின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் மத குருவாகவும் சேவை செய்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது அதனை எதிர்த்தும் போராடியுள்ளார்.

இதேவேளை ஈழ விடுதலைப் புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார்.

ஈழ ஆதரவாளரான இவர் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்து வரும் நிலையில், இவரின் இழப்பு தமிழர்களின் மனதை பெருமளவு பாதித்துள்ளது.