பிரபாகரனின் போராட்டத்தின் போது உதவிய இந்திய தேச உறவுகள்! அபாயத்தில் ஈழத் தமிழர்கள்!

இந்திய தேசம் இனியும் காலம் தாழ்த்தாது தனது மௌனத்தை கலைத்து ஈழத்தமிழர்களுக்காக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் வணக்க நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்திய தேசத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ், உரிமைகள் மறுக்கப்பட்டு விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்களாகிய எங்களின் போராட்ட நியாயப்பாடுகளை புரிந்து கொண்டு எங்களுக்காக பல தடவைகள் தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுத்த ஒரு நல்ல மனிதர்.அவரது இழப்பு ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எமக்கும் உரிமைகள் உண்டு, நாங்களும் இந்த மண்ணிலே பூர்வீகமாக வாழுகின்ற ஓர் இனம்.

எமது உரிமைகள் மறுக்கப்பட்டு நாம் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாக தான் நாம் எமது உரிமைகளை வலியுறுத்தி எமது விடுதலைக்காக போராடுகின்றோம் என்பதை ஏற்றுக் கொண்ட ஒரு நல்லுள்ளம் கொண்ட இவர் போன்ற பலர் இந்திய தேசத்தில் இருந்து எமக்காக குரல் கொடுத்தார்கள், இப்போதும் உள்ளார்கள்.

எமது தாயக மண்ணிலே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும். எமக்கும் உரிமைகள் உண்டு அதனை சிங்கள தேசம் மறுக்கின்றது.

எமது நிலத்தை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கி எமது மக்கள் வசிப்பதற்கு நிலமின்றி வீதிகளில் அவலப்பட வைக்கின்றது.

இந்த மண்ணை ஆக்கிரமித்த போர்த்துக்கீசர் இங்கு வந்தபோது எமது பூர்வீக பூமியில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது.

எமது மண்ணில் தமிழர்களாகிய நாம் எமது தனித்துவத்துடன் இறைமையோடும், சுயகௌரவத்தோடும் வாழ்ந்தோம்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் எமது மண்ணை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் எமது நிலத்தை ஒப்படைத்து எம்மை அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த விடயத்தில் எமது பூர்வீக வரலாற்று உண்மைகள் தெரிந்த எமது அண்டை நாடான இந்தியா, ஈழத் தமிழர்களாகிய எமது விடயத்தில் தொடர்ந்தும் மௌனங்காத்து ஒதுங்கிவிட முடியாது.

இந்திய தேசத்தை நாம் நம்புகின்றோம். தமிழர்களாகிய எமது விடுதலை போராட்டத்தைத் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுத்த போது இந்திய தேசத்து உறவுகள் பலர் எமது போராட்டத்திற்கு உதவியுள்ளார்கள்.

எமது போராட்டம் என்பது விடுதலைக்கான போராட்டம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எமது விடுதலைக்கான போராட்ட நியாயங்களை புரிந்து கொண்ட இந்திய தேசம் எமது விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் காக்காது எமக்காக செயற்பட்டு எமது விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

இந்திய தேசத்தை நாம் தொடர்ந்தும் நம்புகின்றோம். ஈழத் தமிழர்களாகிய நாம் இப்போது ஒரு அபாயகரமான சூழலுக்குள் வாழ்கின்றோம்.

இந்தநிலையைக் கருத்தில் கொண்டு எமது இனப்பிரச்சினையை தீர்பதற்கு நாமும் இந்தமண்ணிலே சுதந்திரமாக சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு இந்தியா விரைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.