யாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி!

எமது மாணவர்களின் திறனை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி பாடசாலையின் முதல்வர் த.தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இணைப்பாட விதான செயற்பாடுகளினூடாக ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எமது மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் தலைசிறந்து விளங்கியவர்கள். தற்போதும் தலைசிறந்து விளங்கக் கூடிய வகையில் அவர்களிடம் திறன்கள் இருக்கிறது.

அவர்களின் திறனை மழுங்கடித்து எமது மாணவர்களையும் இளைஞர்களையும் திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் முறியடித்து நாம் கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.