இரண்டு மாதங்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்போகும் மைத்திரி! சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்தினால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்னும் இரண்டு மாதங்களில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

எனினும், இதனால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றுள்ளது.

எனினும், இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தினால் இழக்கச் செய்யப்படலாம் என எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்க காலத்தில் மீண்டும் அந்த சலுகை இலங்கைக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.