மகிந்த தரப் போகும் தீர்வுத் திட்டம் என்ன? வெளியிடக் கோருகிறார் சி.வி.கே!

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும்.

தாம் வழங்கக்கூடிய தீர்வுத் திட்டம் என்ன என்பதை அவர் அப்போதும் கூறவில்லை. இப்போதும் தெளிவாகக் கூறவில்லை.”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார் .

தமது ஆட்சியில் அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தீர்வுத் திட்டத்தைக் குழப்பியது என்று மகிந்த கூறுவது அரசியல் சந்தர்ப்பவாதக் கருத்தாகும்.

ஏனெனில் மகிந்தவுடன் கூட்டமைப்பு குறைந்தது 18 தடவைகள் தீர்வு விடயம் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியது. அதில் சுமுகமான தீர்வு வழங்க மகிந்த முன்வரவில்லை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் மெளனிக்கப்பட்ட பின்னர் மிகவும் அற்புதமான வாய்ப்புக்கள் இருந்தன. அன்றைய காலத்தில் மகிந்தவுக்கு அதிகாரமும் பலமும் சாதகமாக இருந்தது.

அதனைப் பயன்படுத்தாமல் 13 பிளஸ் என்று கூறிக் கொண்டிருந்தவர் தற்போது 13 மைனஸில் பேசிக் கொண்டிருக்கின்றார்.அரசியல் தீர்வு தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு இப்படித்தான் உள்ளது.

இவ்வாறான நிலையில் தீர்வு கிடைக்காமைக்குக் கூட்டமைப்புதான் முழுப் பொறுப்பு என்று கூறுவது பொருத்தமற்றது. அவரால் வழங்கக் கூடிய தீர்வு என்ன என்பதை தெளிவாக அதிகாரத்தில் இருந்தபோதும் கூறவில்லை.

தற்போதும் கூறவில்லை. தற்போதுகூடத் தெளிவாகக் கூறுவாராயின் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.