அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது! ஸ்ரீநேசன் எம்.பி!

வருகின்ற பாதீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கின்ற, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது. எனவே தற்போதைய நல்லிணக்க அமைச்சராக இருக்கும் எமது மனோகணேசன் அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற ஒரு அமைச்சராக இருக்கின்றமையால் எமது படுவான்கரை எழுவான்கரைப் பிரதேசங்களுக்கான இணைப்புகளை ஏற்படுத்தவதற்கு இந்தப் பாலங்கள் அவசியமாக இருக்கின்றன.

எனவே அமைச்சர் அவர்கள் சந்திவெளிக்கு வந்ததற்கு ஓர் அடையாளமாக சந்திவெளி திகிலிவெட்டைப் பாலத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகின்ற வரவு செலவுத் திட்டத்தின் போது தொழிற்சாலைகள் அமைக்கின்ற விடயம், பாலங்கள், வீதிகள் அமைக்கின்ற விடயம், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.