கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நீண்டகால வேண்டுகோளுக்கு அமைய மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக 4474 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டடம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்லானது பிரதமரினால் வைபவ ரீதியாக இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 1974 மில்லியன்கள் கட்டடத்திற்கும் மொத்த நிதி 4474 மில்லியன் இதில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் காணப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றினூடாக கடந்த காலங்களில் பல்வேறு கட்டமாக மேற்கொண்ட பகிரதப் பிரயத்தனங்களை அடுத்தே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் சாத்தியமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கென 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான வஜிர அபேகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.