மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் மற்றும், கவனயீர்ப்புக்கள்பல இடம்பெறுகின்றன.
அவ்வாறு இடம்பெறும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள் பலர், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒலுமடுப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்கள்மீது பிரயோகிக்கப்படும் அநீதிகளுக்கெதிராக நாம் போராடும்போது, வேறு இனத்தவர்கள் எமது உரிமைப் போராட்டங்களை நியாயமான கோரிக்கை என ஏற்று ஆதரவளிப்பதில்லை.

ஆனால் தற்போது எமது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைக்கும் நோக்குடன், தமக்கு வாக்களிக்குமாறு வேற்று இனத்தவர்கள் பலர் தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருகின்றனர்.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பலவும் தற்போது ஆக்கிரமிக்கப்படுகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பலவும் அபகரிக்கப்படுகின்றன.

இதனைவிட கேப்பாப்பிலவு, வட்டுவாகல், பகுதியில்அமைந்துள்ள கோத்தாபய கடற்படை முகாம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ளனர். இன்னும் பல தமிழர்களுடை காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. அதற்காகவும் நாம் போராடுகின்றோம்.

அதேவேளை பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த எமது தமிழ் மக்களின் காணிகள், தொடர்போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுமிருந்தன.

இதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டம் தற்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கெதிராகவும் போராட்டங்கள் இடம்பெற்றன.

மேலும் நீராவியடி, குருந்தூர் மலை, கொக்கிளாய், கற்சிலைமடு ஆகிய தமிழர்களின் பூர்வீக பகுதிகளில் திட்டமிடப்பட்ட பௌத்த மதத் திணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய திட்டமிடப்பட்ட மதத் திணிப்பு செயற்பாடுகளுக்கெதிராகவும் தமிழர்கள் நாங்கள் போராடுகின்றோம்.

இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக நிலப்பறிப்புக்களுக்கெதிரான போராட்டங்கள், தமிழர்களின் நில மீட்புப் போராட்டங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள், திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பௌத்த மதத் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான போராட்டங்கள் என தமிழர்களின் உரிமைசார் போராட்டங்கள் பலவும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைசார் போராட்டங்களில் இன ரீதியாக சிங்களக் கட்சிகளோஅல்லது முஸ்லிம் கட்சிகளோ பங்கெடுப்பதில்லை. தமிழர்களின் போராட்டங்கள் நியாயமானவை என அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால் தற்போது வேற்று இனத்தவர்கள் பலரும் எமது தமிழ் வாக்குகளைச் சிதைப்பதற்காக, எமது தமிழ் மக்களிடமே வாக்குப் பிச்சை கேட்கின்றனர்.

இதனைத் தமிழ் மக்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே தமிழ் மக்கள்அனைவரும், தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்தும் போராடுகின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே இம்முறையும் அமோகமாக வாக்களிக்கவேண்டும் – என்றார்.