கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்! – மாவை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்த எதிர்வரும் 5ஆம் திகதி ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுசேர்ந்து அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக – அசைக்‍க முடியாத கட்சியாக – பலம் பொருந்திய கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பலத்தை ஒரே குடையின் கீழ் – ஒரே சக்தியாக மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எமது அன்புக்குரிய – பாசத்துக்குரிய தமிழ் வாக்காளர் பெருமக்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதங்களாக்கி இந்தப் பலத்தை சர்வதேசத்துக்கு மீண்டும் ஒரு தடவை எடுத்துக்காட்ட வேண்டும். அந்தப் பலம் கடந்த காலங்களைவிட அதிசக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமையன்று வடக்கு, கிழக்கிலுள்ள ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் இந்தக் கடமையைத் தவறாது செய்ய வேண்டும். அதனூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிச் செய்தி உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அந்த மாபெரும் வெற்றிச் செய்தியைக் கேட்டு தமிழர்களை மிதித்து ஆள முயலும் சிங்களப் பேரினவாதம் கதிகலங்க வேண்டும். மாற்று அணிகள் ஓடி ஒழிய வேண்டும்.

அந்தச் சரித்திர வெற்றி – தமிழர்கள் ஓரணியில் பெரும் பலத்துடன் நிற்கும் செய்தி சர்வதேச சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டும்; தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற இலங்கை அரசு மீதான சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன்பிரகாரம் இலங்கை அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். தீர்வுக்கான பேச்சுக்கள் ஆரம்பமாக வேண்டும். நியாயமான – நிரந்தமான தீர்வைத் தமிழர்கள் பெறவேண்டும்” – என்றார்.